முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

நாற்றுகள் தருமே... வாட்டமில்லாத லாபம்!

இளங்கோவன்
வாடிப்பட்டி,
குமரன் நர்சரி,
மதுரை மாவட்டம்.
தொடர்புக்கு : 99949 66642

விவசாய படிப்பு படித்தேன். விவசாயத்திலேயே சாதிக்க நினைத்தேன். நாற்றுகள் உற்பத்தியை துவங்கினேன், என்கிறார், மதுரை வாடிப்பட்டி குமரன் நர்சரி உரிமையாளர் இளங்கோவன்.வாடிப்பட்டியில் 30 ஏக்கரில் பழம், அலங்காரசெடிகள், பூக்களின் நாற்றுக்களை உற்பத்தி செய்து, அவற்றை விற்பனை செய்யும் இளங்கோவன் கூறியது:கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி விவசாய படிப்பு முடித்தபின், அடுத்து என்ன என்ற கேள்வி நின்றது. விவசாயத்தையே தொழிலாக செய்ய நினைத்தபோது அதற்கான ஆலோசனைகள் தேவைப்பட்டது. கோவையில் புல்தரை வடிவமைப்பில் இரண்டாண்டுகள் ஈடுபட்டேன். அதன்பின் மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் மத்திய அரசு வழங்கிய இரண்டு கால விவசாய பயிற்சி முடித்தேன்.

தொழில் துவங்குவது, கடன் குறித்த அனைத்து தகவல்களுக்கும் வழிகாட்டினர். நர்சரி துவங்கினேன். சொந்தமாக 30 ஏக்கர் இடம் இருந்தது. ஆரம்பத்தில் இரண்டு ஏக்கரில் காடு வகையைச் சேர்ந்த தேக்கு, சவுக்கு, மலைவேம்பு, சந்தனமரக்கன்றுகளை உற்பத்தி செய்தேன். தற்போது 30 ஏக்கரிலும் அனைத்துவித மலர்ச்செடிகள், அலங்கார பச்சை, பலவண்ண இலை செடிகளை நாற்றாக உற்பத்தி செய்கிறேன். சிவப்பு பூக்களுடன் சிந்தை ஈர்க்கும் சொர்க்கம் மரம், கிளிமூக்கு மரம், பாகீனியா, மலைப்பூவரசு, பூவரசு, புங்கன், மகிழம், செண்பகம், பூமருது, புன்னை, மனோரஞ்சிதம் மரக் கன்றுகளை உற்பத்தி செய்கிறேன். மரங்களின் விதைகளுக்காக தமிழகம் முழுவதும் பயணம் செய்து சேகரிக்கிறேன். விதை சேகரிப்பாளர்களும் உள்ளனர்.

கொடைக்கானல் கொய்மலர்களைத் தவிர மனம் மயக்கும் மலர்ச்செடிகள் எல்லாமே இங்குள்ளன. இருவாட்சி, வெள்ளை ரோஜாவாய் சிரிக்கும் நந்தியாவட்டை, ரோஜா நிறத்தில் கொத்தாய் பூக்கும் பூமருது ஆகியவை வீட்டிற்கு அழகு சேர்க்கும். கொய்யா, மா, சப்போட்டா பழமரக்கன்றுகளும் உற்பத்தி செய்கிறேன். புல்தரையும் வடிவமைத்து தருகிறேன். வீட்டில் புல்தரையுடன் அழகிய தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகள் வழங்குகிறேன். நாற்று உற்பத்தியில் வாட்டமின்றி லாபம் கிடைக்கிறது. இதன் மூலம் 80 பேருக்கு வேலைதர முடிகிறது. இதுவும் பசுமை உற்பத்திக்கு நான் செய்யும் சிறுமுயற்சி தான் என்றார்.

Updated on August, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015